ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ரசிகர்களை அதிர வைத்த மிகப்பெரிய அம்பயரிங் சர்ச்சை வெடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான ஹெய்லி மேத்யூஸ், மூன்றாவது நடுவரின் மிகவும் அதிர்ச்சிகரமான முடிவால்  மைதானத்திலேயே தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதாவது வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸின் 4-ஆவது ஓவரில், இங்கிலாந்து பந்துவீச்சாளர் லின்சி ஸ்மித் வீசிய பந்தை ஹெய்லி மேத்யூஸ் கட் ஷாட் ஆட முயன்றார். அப்போது பந்து விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸின் கைகளில் தஞ்சமடைய, இங்கிலாந்து வீராங்கனைகள் கேட்ச் கேட்டு பலத்த அப்பீல் செய்தனர். ஆனால், கள நடுவர் என்.ஜனானி இதற்கு அவுட் தர மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் சார்லி டீன் உடனடியாக டிஆர்எஸ்  ரிவியூ எடுத்தார்.

டிவி ரீப்ளேயில் பந்து பேட்டைக் கடந்து செல்லும்போது அவற்றுக்கு இடையே தெளிவான இடைவெளி இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் நிமாலி பெரேரா ‘அல்ட்ரா-எட்ஜ்’ தொழில்நுட்பத்தைச் சோதித்தபோது, அதில் ஒரு பெரிய ஸ்பைக்  சத்தம் பதிவாகியிருந்தது. மிகவும் விசித்திரமாக, அந்த ஸ்பைக் காட்டிய அதே பிரேமில் வீடியோவில் பந்திற்கும் பேட்டிற்கும் இடையே துல்லியமான கேப் இருந்தது.

 

நடுவர் பெரேராவே அந்த இடைவெளியை வீடியோவில் கவனித்த போதிலும், இறுதியில் அல்ட்ரா-எட்ஜ் ஸ்பைக்கை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கள நடுவரின் தீர்ப்பை மாற்றி ‘அவுட்’ என அறிவித்தார். இந்த அதிர்ச்சிகரமான முடிவால் நிலைகுலைந்த ஹெய்லி மேத்யூஸ், மைதானத்தை விட்டு வெளியேறும் முன் நடுவர்கள் ஜனானி மற்றும் எலோயிஸ் ஷெரிடனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் டக்-அவுட் பகுதிக்குச் சென்ற பிறகும் கோபம் தணியாத அவர், தலைமைப் பயிற்சியாளர் ஷேன் டிட்ஸ் உடன் அமர்ந்து அந்த விசித்திரமான அவுட் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து ஆதங்கப்பட்டார். மேலும், பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றிருந்த மாற்று நடுவர் (கெரின் கிளாஸ்டேயிடமும் இந்த தவறான தீர்ப்பு குறித்து நீண்ட நேரம் தனது பலத்த அதிருப்தியை விவாதித்தார்.