ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை 2026 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கால்பந்து போட்டிக்குத் தனது நீண்ட நாள்  கம்பேக்கைக் கொடுத்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான தசைநார் கிழிவு காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த 34 வயதான நெய்மர், இப்போட்டியின் 75-ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது மியாமி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று பலத்த வரவேற்பு அளித்தனர். போட்டி முடிவடைந்ததும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடிய உணர்ச்சிப் பெருக்கால் நெய்மர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

வெற்றிக்குப் பிறகு, மைதானத்தின் அருகே அமர்ந்திருந்த தனது குடும்பத்தினரை நோக்கி நெய்மர் நடந்து சென்றபோது, அவரது மகன் தனது தந்தையைக் கட்டியணைப்பதற்காக ஓடி வந்தார். ஆனால், மைதான பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள், அவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழையும் தீவிர ரசிகர் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் மைதானத்தில் சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், அவர் நெய்மரின் மகன் தான் என்ற உண்மை உடனடியாகத் தெரிந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது தவறை உணர்ந்து விலகிச் சென்றனர். இந்த சிறு தவறுக்குப் பின்னர், நெய்மர் தனது மகனைக் கட்டியணைத்து, தலையில் முத்தமிட்டுத் தனது கம்பேக்கை நெகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பிரேசில் அணி நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற உதவிய இந்த வெற்றியைக் காட்டிலும், நெய்மரின் மகனைப் பாதுகாப்புப் படையினர் தடுத்த இந்த  தருணமே இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.