பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘ஷெர்-இ-பஞ்சாப் டி20 லீக்’ தொடரின் முதல் பிளேயர் ஏலம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏலத்தில் எதிர்பாராத திருப்பமாக, இந்திய அணியின் நட்சத்திரக் கேப்டன் சுப்மன் கில்லை விட ஒரு உள்ளூர் வீரருக்கு அதிக தொகை வழங்கப்பட்டு உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியுள்ளனர்.
இந்த ஏலத்தில் ஸ்டார் ஆல்ரவுண்டரான சன்வீர் சிங் மிகவும் விலை உயர்ந்த வீரராக உருவெடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ‘fazilka Falcons’ அணி இவரைத் தட்டிச் செல்ல பிரம்மாண்டமான முறையில் 13.20 லட்சம் ரூபாயை வாரி வழங்கி ஏலத்தில் கைப்பற்றியுள்ளது.
இதன் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதே ‘Fazilka Falcons’ அணிதான் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லைத் தங்கள் அணியின் ‘மார்க்கி வீரராக’ ஒப்பந்தம் செய்துள்ளது. லீக் விதிகளின்படி அனைத்து மார்க்கி வீரர்களுக்கும் நிலையான தொகையாக 10 லட்சம் ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்க்கி வீரரான சுப்மன் கில்லை விட, ஏலம் மூலம் எடுக்கப்பட்ட சன்வீர் சிங் கூடுதல் விலையைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இருவரும் ஒரே அணிக்காகக் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
29 வயதான சன்வீர் சிங், பஞ்சாப் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி வரும் திறமையான ஆல்ரவுண்டர் ஆவார். மேலும், இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ( அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவரது டி20 கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் மிரட்டலானவை:
இதுவரை 46 டி20 போட்டிகளில் விளையாடி, 32.94 சராசரி மற்றும் 180.06 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 560 ரன்களை விளாசியுள்ளார். பந்துவீச்சிலும் தனது பங்களிப்பாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர 25 முதல் தரப் போட்டிகளிலு, 41 லிஸ்ட்-ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ள இவரது ஆல்ரவுண்டர் திறமைதான் ஏலத்தில் அணிகளை இவரை நோக்கிப் பாயச் செய்துள்ளது.
இந்தத் தொடரில் பஞ்சாப்பின் முன்னணி வீரர்களும் மார்க்கி பிளேயர்களாக களமிறங்குகிறார்கள். சுப்மன் கில்லைத் தவிர அபிஷேக் சர்மா, அர்ஷதீப் சிங், பிரப்சிம்ரன் சிங், ரமன்தீப் சிங் மற்றும் குர்னூர் ப்ரார் போன்ற நட்சத்திரங்கள் தலா 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வெவ்வேறு அணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
