தமிழகத்தில் குழந்தை பாக்கியம் பெறவும், கர்ப்பிணி பெண்களுக்குப் பாதுகாப்பான சுகப்பிரசவம் நடக்கவும் வழிபட வேண்டிய பல சக்திவாய்ந்த அம்மன் மற்றும் சிவபெருமான் திருக்கோவில்கள் உள்ளன. திருச்சி உறையூர் தான் தோன்றீஸ்வரர் குங்குமவல்லி தாயார் கோவிலில் ஆடிப்பூரம் மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் வளையல் திருவிழா சிறப்பாக நடக்கும். இங்கு சுகப்பிரசவம் வேண்டி கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி திருமணமான பெண்களும் வழங்கும் வளையல்கள் பிரசாதமாகத் தரப்படுகின்றன.
சேலம் தாரமங்கலத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி சஞ்சீவி தீர்த்த தெளிப்பு வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின், தாய்மார்கள் பூக்குழி இறங்கி, அக்னி குண்டத்தில் நின்றபடியே குழந்தைகளுக்குப் பால் புகட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்நொடியற்ற நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆந்திரா-தமிழக எல்லையான ராமகிரியில் அமைந்துள்ள வாலீஸ்வரர் கோவிலில், காலபைரவர் ‘சந்தான பிராப்தி பைரவராக’ அருள் பாலிக்கிறார். இங்குள்ள புனித குளத்தில் நீராடி, கல் வடிவிலான நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு நாய் வாகனத்தை மூன்று முறை சுற்றி வந்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள இளநகர் உடையீசுவரர் கோவிலில் அருள் பாலிக்கும் ‘சுகப்பிரசவ நந்தி’ மிகவும் புகழ்பெற்றது. நிறைமாத கர்ப்பிணி ஒருவர் நந்தியின் மீது சாய்ந்தபோது, நந்தி நகர்ந்து அவருக்குச் சுகப்பிரசவம் ஆக உதவியதாகக் கூறப்படுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் இங்கு வந்து நந்தியை வழிபாட்டால் தங்கு தடையின்றி சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சென்னை மேட்டுப்பாளையம் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் ஆடிப்பூர நாளன்று நடக்கும் வளைகாப்பு திருவிழாவில் வழங்கப்படும் பிரசாத வளையல்கள், பெண்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியத்தையும் சுகப்பிரசவத்தையும் அருளக்கூடியவை. அதேபோல கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தலு மாரியம்மன் கோவிலில் வழிபட்டு குழந்தை வரம் பெற்றவர்கள், மரத்தில் சேலை கட்டி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
