பிரபலமாக இருப்பது வரம் என்றாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சில நேரங்களில் சந்திக்க நேரிடும் சங்கடங்கள் நடிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. குறிப்பாக, பொது இடங்களில் ரசிகர்களின் அத்துமீறல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதுவரை ஆண் ரசிகர்கள் நடிகைகளிடம் அத்துமீறிய சம்பவங்களை பார்த்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகை நிகிதா ராவலுக்கு ஒரு பெண் ரசிகையால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நடிகை நிகிதா ராவல் கலந்துகொண்டார். அப்போது, பெண் ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். நிகிதாவும் சிரித்தமுகத்தோடு சம்மதித்த நிலையில், அந்த பெண் ரசிகை திடீரென நிகிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அடுத்த நொடியில் அவரது உதட்டிலும் முத்தமிட்டு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கடித்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நிகிதா, அந்தப் பெண்ணிடமிருந்து விலக முயன்றும் முடியவில்லை. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஓடிவந்து அந்தப் பெண்ணை விலக்கி, நடிகையைக் காப்பாற்றினர். இதையடுத்து, நிகிதா தனது உதட்டை கையால் மூடியபடி சங்கடத்துடன் அங்கிருந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாலிவுட்டில் நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளராக வலம் வரும் நிகிதா ராவல், இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக இயங்கி வரும் இவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “அன்பைக் காட்டுவதற்கும் ஒரு எல்லை உண்டு; பிரபலங்கள் என்பதால் அவர்களின் அனுமதி இல்லாமல் தொடுவதோ, முத்தமிடுவதோ ஏற்றுக் கொள்ள முடியாத செயல்” என்று தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
