நடிகை திரிஷா சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், அவர் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சில கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இரண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவுகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
சமீபத்தில் தனது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கை குறித்த ஒரு கருத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ஒருகாலத்தில் தான் விரும்பி வேண்டிய வாழ்க்கை தற்போது கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்ற பொருள்படும் அந்த பதிவு, அவரது தற்போதைய வாழ்க்கை குறித்த நேர்மறையான பார்வையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே அவர் வெளியிட்ட மற்றொரு பதிவு தான் தற்போது அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. “இந்த வயதில் ட்ராமா செய்வது சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து மன அமைதியைத் தேடுங்கள்” என்ற பொருள்படும் கருத்தை திரிஷா பகிர்ந்துள்ளார். இதில் அவர் எந்த நபரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இந்தப் பதிவு யாரை நோக்கி கூறப்பட்டது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும், அவரைச் சுற்றியுள்ள வதந்திகளும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பும் அவர் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மறைமுகமாக கருத்து தெரிவித்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இதனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த இரண்டு பதிவுகளும் சாதாரண கருத்துகளா அல்லது தன்னைப் பற்றி பேசுபவர்களுக்கு அளித்த பதிலடியா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.
