கல்விக் கூடங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் கோவில்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், சில கல்வி நிறுவனங்களில் நடக்கும் சில சம்பவங்கள் பெற்றோர்களைப் பதைபதைக்க வைக்கின்றன. அந்த வகையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விடுதியில் நடந்த அரங்கேறிய கொடூர சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மேட்சல்-மல்ககிரி மாவட்டம், தம்மைகுடம் பகுதியில் உள்ள பிரபல ஸ்ரீ சைதன்யா உயர்நிலைப் பள்ளியின் இணைக்கப்பட்ட விடுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் அபிஷேக் என்ற மாணவன் தங்கி கல்வி பயின்று வருகிறான்.

இந்நிலையில், அதே விடுதியில் தங்கியுள்ள சக மாணவர்கள் 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று அபிஷேக்கை கொடூரமாகத் தாக்கியுள்ளது.  கைகளால் மட்டுமல்லாமல், குச்சிகள், தட்டுகள் மற்றும் காலணிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் விடுதி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகிங் என்ற பெயரில் அரங்கேறிய இந்தத் தாக்குதலில் மாணவன் பலத்த காயமடைந்துள்ளான்.

தங்கள் மகனுக்கு நடந்த கொடூரத்தைக் கூட மறைக்க முயன்றது பள்ளி நிர்வாகம். அபிஷேக் மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவனது பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் தனது பெற்றோரிடம் உண்மையை உடைத்த அபிஷேக், சக மாணவர்களால் தான் எப்படித் தாக்கப்பட்டேன் என்பதை விவரித்தான். தன் மகனின் நிலைக் கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அபிஷேக்கின் உடல்நிலை குறித்த கவலை ஒருபுறம் இருக்க, “உண்மையை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தின் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே பெற்றோரின் கண்ணீருடன் கூடிய கோரிக்கையாக உள்ளது.