திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை அன்று நடைபெற்றபோது, அங்கு அரங்கேறிய எதிர்பாராத சம்பவங்களால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது . சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினரான அல்லா பிச்சை, தவெகவின் கொடியினைத் தோளில் அணிந்தவாறே கூட்டத்திற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி, தவெகவின் தேர்தல் சின்னமான விசிலை வாயில் வைத்து ஊதியபடி அவர் செய்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாமன்றக் கூட்டத்தை ஒரு அரசியல் கட்சி மேடைபோல் மாற்றுவதா என்று கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர்கள், விசில் அடித்த கவுன்சிலரின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு, கூட்ட அரங்கு போர்க்களமானது . தொடர்ந்து விசிலைப் பறிக்க முயன்றதால் ஏற்பட்ட சலசலப்பு உச்சத்தை எட்டியதை அடுத்து, மாமன்ற விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி கவுன்சிலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கைகள் வலுத்தன.

இதனைத் தொடர்ந்து, அவைக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும், மாமன்ற நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தற்காகவும் 19-வது வார்டு உறுப்பினர் அல்லா பிச்சையைச் சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் மாமன்றக் கூட்டங்களில் அவர் பங்கேற்கக் கூடாது என்றும் அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.