கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (31). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இன்று இவருக்கு நடந்த கோரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. புதுச்சேரி எல்லைக்கு அருகில் உள்ள இரட்டைசாவடி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கடலூர் அருகே காரை ஓட்டிவந்த சசிக்குமார், இரட்டைசாவடி பகுதியில் காரை நிறுத்தி சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தவாறு வந்த மர்ம நபர்கள், சசிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
வெடிகுண்டுத் தாக்குதலில் நிலைகுலைந்து போன அவரை, அந்த கும்பல் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சசிக்குமார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சசிகுமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலூர் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சசிக்குமார் எதற்காகக் கொல்லப்பட்டார்? இவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இரு மாநிலப் போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
