உடற்பயிற்சிக்கூடத்திற்கு  சென்று தினமும் பல மணி நேரம் செலவழித்தால் மட்டுமே ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தமில்லை. நமது உடல் உண்மையிலேயே எவ்வளவு வலிமையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும்  இருக்கிறது என்பதை அறிவது மிகவும் அவசியம். இதற்காக மருத்துவமனைக்கோ அல்லது பெரிய பரிசோதனை மையங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை. நாம் அன்றாடம் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய சோதனைகள் மூலமாகவே நமது உடலின் உண்மையான ஃபிட்னஸ் அளவைக் மிகத் துல்லியமாகக் கண்டறிந்து விடலாம்.

முதலாவதாக, நமது கீழ் உடல் மற்றும் கால்களின் வலிமையைச் சோதிக்க ‘நாற்காலி சோதனை’  உதவுகிறது. ஒரு நாற்காலியில் கைகளைக் கட்டியபடி அமர்ந்து, கைகளின் ஆதரவின்றி 30 வினாடிகளில் எத்தனை முறை உங்களால் எழுந்து அமர முடிகிறது என்று எண்ண வேண்டும். இதில் 30 வினாடிகளில் 12 முதல் 15 முறைக்கும் அதிகமாகச் செய்ய முடிந்தால், உங்கள் கால்களும் இடுப்புப் பகுதியும் நல்ல பலத்துடன் இருக்கிறது என்று உறுதியாக நம்பலாம். இது நமது அன்றாடச் செயல்பாடுகளுக்கான அடிப்படையான தசை வலிமையை வெளிப்படுத்தும்.

இரண்டாவதாக, உடலின் சமநிலையை  அறிவது வயதான காலத்திலும் நாம் தடுமாறி விழாமல் இருக்க மிகவும் அவசியமானது. இதற்காகக் காலணிகள் இன்றி ஒற்றைக் காலில் நின்று சோதிக்கும் ‘ஒற்றைக்கால் பேலன்ஸ் சோதனை’ செய்யலாம். கண்கள் திறந்த நிலையில் 40 வினாடிகளுக்கு மேலும், கண்கள் மூடிய நிலையில் 10 முதல் 15 வினாடிகள் வரையிலும் உங்களால் ஒற்றைக் காலில் அசையாமல் நிற்க முடிந்தால், உங்கள் நரம்பு மண்டலமும் தசைகளும் மிகச் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன என்று அர்த்தம்.

மூன்றாவதாக, உடலின் மேல் பகுதி வலிமை மற்றும் தசை நெகிழ்வுத்தன்மையைச் சோதிக்கலாம். இடைவெளியின்றித் தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட ‘புஷ்-அப்ஸ்’  செய்வது உங்கள் தோள்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியின் உறுதியைக் காட்டும். அதேபோல, தரையில் கால்களை நீட்டி அமர்ந்து, முழங்கால்களை வளைக்காமல் கைகளால் கால் விரல்களைத் தொடும் ‘ஃபிளெக்சிபிலிட்டி சோதனை’ மூலம் தசைநார்களின் நெகிழ்வுத்தன்மையை அறியலாம். இந்த 4 எளிய சோதனைகளையும் வீட்டிலேயே செய்து பார்த்து, உங்கள் உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்!