திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது திருப்பூர்பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் தனலட்சுமி மற்றும் அவரது மகள் பூவரசி ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அக்ஷய் குமார் என்ற இளைஞர், பூவரசியை கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பூவரசியின் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்

ஆனால் இந்த திருமணத்தை  தாயார் ஏற்க மறுத்ததால் அக்ஷய்யிடம் பேசுவதை பூவரசி தொடர்ந்து தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பூவரசியை நேரில் சந்தித்து  தன்னுடன் வருமாறு அக்ஷய் வற்புறுத்தியுள்ளார். ஆனால், தாயின் எதிர்ப்புக் காரணமாக பூவரசி அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திடீரென ஆத்திரமடைந்த அக்ஷய், அவர்கள் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்து தாய் தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த கொலையாளி அக்ஷய் குமாரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலைக் கைவிட்டு தன்னைத் தவிர்க்க முயன்றதாலும், தாயார் தனலட்சுமி எதிர்த்ததாலும் ஆத்திரத்தில் இந்த கொடூரக் செயலில் ஈடுபட்டதாக அக்ஷய் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.