கொழுப்பு கல்லீரல்  என்பது கல்லீரல் செல்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிந்துவிடும் ஒரு மருத்துவ நிலையாகும். ஆரோக்கியமான கல்லீரலில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருக்கும்; ஆனால், கல்லீரலின் மொத்த எடையில் 5% முதல் 10% வரை கொழுப்பு அதிகரிக்கும் போது அது கொழுப்பு கல்லீரல் நோயாகக் கருதப்படுகிறது. இது மது அருந்தாதவர்களுக்கும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் வரக்கூடிய ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்றும், அதிகளவில் மது அருந்துவதால் ஏற்படும் ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

இந்த நோய் ஆரம்பக் கட்டத்தில் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது என்பதால் இதை உடனடியாகக் கண்டறிவது கடினம். ஆனால் பாதிப்பு தீவிரமடைம்போது கடுமையான சோர்வு, பலவீனம், மேல் வயிற்றின் வலது பகுதியில் லேசான வலி அல்லது பாரம் போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும், பசியின்மை, திடீர் உடல் எடை குறைதல், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், வயிறு மற்றும் கால்களில் வீக்கம், உடல் முழுவதும் கடுமையான அரிப்பு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

உடலில் அதிகப்படியான எடை மற்றும் தொப்பை இருப்பது, டைப் 2 சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்புத் திறன், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவை இந்நோய் வர முதன்மைக் காரணங்களாகும். இதுதவிர, துரித உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்பது, மரபணு பிரச்சனைகள், ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் அதிக அளவிலான மதுப்பழக்கம் ஆகியவை கல்லீரலால் கொழுப்பைச் சரியாகப் பிரித்து வெளியேற்ற முடியாமல் தேக்கமடையச் செய்கின்றன.

கொழுப்பு கல்லீரல் நோயைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் பயன்படுகின்றன. தேவைப்பட்டால் பைப்ரோஸ்கேன் அல்லது பயாப்ஸி பரிசோதனைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் கல்லீரல் சுருக்கம்  கல்லீரல் செயலிழப்பு மற்றும் புற்றுநோய் வரை கொண்டு சென்று, இறுதியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இதற்கென தனியாகக் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லாததால், வாழ்க்கை முறை மாற்றமே இதற்கான சிறந்த சிகிச்சையாகும். உடல் எடையைப் படிப்படியாகக் குறைப்பது, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொண்டு எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தை முழுமையாக நிறுத்துவது மற்றும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது போன்றவற்றின் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்தி முழுமையாகக் குணப்படுத்த முடியும்.