குழந்தைகளின் உயர வளர்ச்சி என்பது வெறும் அழகோ அல்லது தோற்றமோ சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். மரபணு காரணிகள் உயரத்தை நிர்ணயித்தாலும், சரியான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை ஒரு குழந்தை தனது அதிகபட்ச உயரத்தை எட்டுவதற்கு மிக அவசியமாகும் என குழந்தை நல மருத்துவர் டி. ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகின்றன. எனவே, சிறுவயதில் இருந்தே பால் பொருட்கள், முட்டை, மீன், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு வழங்கி பழக்க வேண்டும். துரித உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை அதிகம் கொடுப்பது உடல் எடையை அதிகரித்து அவர்களின் உயர வளர்ச்சியிலும் தடையை ஏற்படுத்துகிறது.
இரவில் ஆழமான உறக்கத்தின் போதுதான் உடலின் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. ஆனால், தற்காலத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் தூக்கம் கெட்டு, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது ஹார்மோன் சுரப்பைப் பெருமளவு பாதிப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போன் திரைகளில் இருந்து விலகி, வயதுக்கு ஏற்ற போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
படிப்பு மற்றும் செல்போன் பயன்பாட்டால் குழந்தைகள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் செயல்பாட்டைக் குறைத்து, உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க ஓடுதல், குதித்தல், நீந்துதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இவை எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்தி ஆரோக்கியமான உயர வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உயர வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். சக குழந்தைகளுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், இது வெறும் உயரக் குறைபாடு மட்டுமல்லாமல் ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது மரபணு சார்ந்த நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம்.
