சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அரசு பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பாராட்டிய அவர், சில முக்கிய அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சிகளை எதிர்கொள்வதில் இன்னும் கூடுதல் தீவிரத்தைக் காட்ட வேண்டும் என்றும், இன்னும் சிறிது பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன்பே தான் இந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசி இருந்ததை நினைவுபடுத்திய அவர், பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்துச் சட்டமன்றத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும், அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதை தான் பார்க்கவில்லை என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார் . பல்வேறு தொழில்களில் இருந்து அவர் தற்போதுதான் வெளியே வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உதயநிதியும் ஆதவ் அர்ஜுனாவும் பொதுவெளியில் பேசும்போது சற்று பக்குவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
