கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நீலமேகப் பெருமாள் திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகச் சிறப்புமிக்க தலமாகும். இக்கோவிலில் நீலமேகப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். பாண்டிய, பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் பலரால் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைப் போலவே ஏழு மதில் சுவர்களைக் கொண்டு இத்திருக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவுவாயிலைக் கடந்து சென்றதும் கொடிமரமும், அதனருகே அழகிய நந்தவனமும் அமைந்திருக்கின்றன. உள்பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்திலும், அவரைச் சுற்றி வரும் வழியில் ஆண்டாள் நாச்சியாரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுப் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கமாகும். அவ்வாறு காவிரியில் நீராடி, நீலமேகப் பெருமாளை மனதார வேண்டித் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பதும், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

குறிப்பாகத் திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் இங்கிருக்கும் பெருமாளை வந்து வழிபடத் தடைகள் நீங்கி விரைவிலேயே திருமணம் நடக்கும் எனக் கூறப்படுகிறது. இத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற வைணவ விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலையில் இக்கோவில் அமைந்துள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்காகக் கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.