சென்னை மேடவாக்கம் அருகே உள்ள அரசன் கழனி என்ற ஊரில், பெரியநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மூலிகைகள் நிறைந்த ‘ஔஷத மலை’ அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில், அகத்திய மாமுனிவர் நேரில் வந்து பூஜித்த மிகச் சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமாகும்.
தென்திசை நோக்கிப் பயணித்த அகத்தியர், அரசன் கழனியில் உள்ள ஔஷத மலையில் செழித்து வளர்ந்திருந்த எலும்பு ஒட்டித் தழை, நத்தை சூரி போன்ற அரிய மூலிகைகளைக் கொண்டு மக்களின் நோய்களைக் குணப்படுத்தினார். மேலும் அங்குள்ள சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து அபிஷேகம் செய்து வழிபட்டு, சிவபெருமானின் பெருமைகளையும் சித்த மருத்துவத்தின் சிறப்பையும் மக்களுக்குப் போதித்தார்.
அகத்தியர் வழிபட்ட அந்தச் சுயம்பு லிங்கமே இன்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலாக வீற்றிருக்கிறது. சித்தர்கள் சூட்சும வடிவில் வாழும் இந்த ஔஷத மலையே சிவலிங்கமாகப் போற்றப்படுகிறது. அதனால் கார்த்திகைத் தீபத்தன்று மலை உச்சியில் தீபமேற்றப்படுவதோடு, பௌர்ணமி தோறும் மாலையில் பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) இறைவனை வழிபட்டு வருகிறார்கள்.
இங்குள்ள அகத்தியர் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் திருமணத் தடைகள் விலகி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும் தொடர் கஷ்டங்கள், தொழிலில் நஷ்டம் மற்றும் வறுமையால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 3 பிரதோஷ நாட்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, வாழ்வு வளம்பெறும் எனக் கூறப்படுகிறது.
வேளச்சேரி – கிழக்குத் தாம்பரம் சாலையில் உள்ள மேடவாக்கம் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவில் ஒட்டியம்பாக்கம் செல்லும் வழியில் சித்தாலப்பாக்கம் பகுதியில் இக்கோயிலும் ஔஷத மலையும் அமைந்துள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காகக் கோவில் திறந்திருக்கும்.
