இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் உயிரிழந்துவிட்டதாகவும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால், அவரது மரணம் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், முஜ்தபா கமேனி ஈரானின் முக்கிய ராணுவப் பதவிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான ஐஆர்ஜிசி-க்கு (IRGC) மேஜர் ஜெனரல் அகமது வாஹிதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐஆர்ஜிசியின் குத்ஸ் படைக்கு தலைமை வகித்த அனுபவம் வாஹிதிக்கு உள்ளது. அதேபோல், மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள் போர் சூழலில் ஈரானின் ராணுவ கட்டமைப்பை மேலும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், ரியர் அட்மிரல் அலி அஸ்மாயி ஐஆர்ஜிசி கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக ஐஆர்ஜிசியுடன் தொடர்புடைய ஹுசைன் தாயிப், பாசிஜ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கியூமர்ஸ் ஹைதரி மற்றும் முஸ்தஃபா இசாதி ஆகியோருக்கும் ராணுவ கட்டமைப்பில் முக்கிய துணைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் ராணுவம், ஐஆர்ஜிசி, கடற்படை மற்றும் பாசிஜ் அமைப்புகளில் உயர்மட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடர் நியமனங்கள் சாதாரண நிர்வாக மாற்றமாக பார்க்கப்படவில்லை. போர் கால அனுபவம் கொண்ட மூத்த அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தி, ராணுவ கட்டளை அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐஆர்ஜிசியின் செல்வாக்கு ஈரானின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய முடிவுகளில் ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில், புதிய நியமனங்கள் அந்த அதிகாரக் கட்டமைப்பை மேலும் ஒருங்கிணைக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் முஜ்தபா கமேனியின் தலைமையின் கீழ் ஈரானின் ராணுவ நிர்வாகத்தில் புதிய கட்டம் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.