சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்துக்கும் அவரது சகோதரர் மாஹெர் அல்-அசாத்துக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அசாத் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு கொலை செய்தல், சித்ரவதை, சட்டவிரோத கைது உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர்களை சர்வதேச சட்ட நடைமுறைகள் மூலம் நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளர்ச்சிப் படைகளின் தீவிர தாக்குதலைத் தொடர்ந்து பஷர் அல்-அசாத் மற்றும் மாஹெர் அல்-அசாத் சிரியாவை விட்டு ரஷியாவுக்கு தப்பிச் சென்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்த அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது ராணுவத்தின் முக்கிய பாதுகாப்புப் பிரிவுக்கு மாஹெர் அல்-அசாத் தலைமை வகித்தார். அசாத் ஆட்சிக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டங்களை ஒடுக்க அரசு தரப்பில் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் பஷர் அல்-அசாத்தின் உறவினரும், தாரா மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புப் பிரிவு தலைவருமான ஆதிஃப் நஜீப்புக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு அசாத் எதிர்ப்பு வாசகங்களை சுவரில் எழுதிய 15 சிறுவர்களை சித்ரவதை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தாரா பகுதியில் தொடங்கிய போராட்டங்கள் படிப்படியாக சிரியாவின் பல பகுதிகளுக்கும் பரவின. சுமார் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அசாத் ஆட்சிக் கால அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், இடைக்கால நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தற்போதைய சிரிய அரசின் முக்கிய முயற்சிகளாக உள்ளன.
பஷர் அல்-அசாத் கடந்த 2000-ஆம் ஆண்டு தனது 34-ஆவது வயதில் சிரியாவின் அதிபராகப் பதவியேற்றார். அவரது தந்தை ஹபீஸ் அல்-அசாத்துக்குப் பிறகு அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆரம்பத்தில் இளம் சீர்திருத்தவாத தலைவராக கருதப்பட்ட அவர், அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தபோது, அவற்றை ஒடுக்க அவரது அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அவரது ஆட்சியின் முக்கிய அடையாளமாக மாறின. 2024-ஆம் ஆண்டு அவரது ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும் சிரியாவில் வன்முறை மற்றும் சமூகப் பிரச்னைகள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
