சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் அருகே உள்ள கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. குடும்பச் சூழல் காரணமாகத் தாயாருடன் வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, தாயின் கள்ளக்காதலனே பாலியல் தொல்லை அளித்துள்ள கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு  15 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை மற்றும் தாய்க்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி தன் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

இந்தச் சூழலில், சிறுமியின் தாயாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதைத் தொடர்ந்து, வீரமணி அடிக்கடி அந்தச் சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, தாயின் நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய வீரமணி, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாளுக்கு நாள் எல்லை மீறிய இந்தத் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று அப்பள்ளியில் ‘பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி’ நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட தகவல்களைக் கேட்டவுடன் துணிச்சல் பெற்ற அந்தச் சிறுமி, உடனடியாகப் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று தனக்கு வீரமணியால் தொடர்ந்து நடந்து வந்த பாலியல் தொல்லைகள் குறித்துக் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

தலைமை ஆசிரியை அளித்த தகவலின் அடிப்படையில், காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்று, போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வீரமணியைப் பிடிக்கக் காவல்துறையினர் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.