மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் போதையில் இருந்த நபர் ஒருவர், காகம் ஒன்றைக் தனது மிதிவண்டியின் பின்னால் கட்டித் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் பதிவான இந்தச் சம்பவம் குறித்த தகவல்களும், அதிர்ச்சியூட்டும் வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. அந்தப் பதிவின்படி, அதிக போதையில் இருந்த நபர் ஒருவர், தன்னால் சரியாக நடக்கக்கூட முடியாத நிலையில் காகம் ஒன்றைப் பிடித்து அதன் இறக்கைகளைப் பறித்தபடியே மிதிவண்டியின் கேரியரில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.
இதைக் கவனித்த விலங்கு நல ஆர்வலர்கள் உடனடியாக அந்த நபரை வழிமறித்து விசாரித்துள்ளனர். காகத்தை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் அதைப் பிடித்துள்ளேன், சமைத்துச் சாப்பிடுவேன்” என்று அந்த நபர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே களத்தில் இறங்கி அந்தப் பறவையைப் பாதுகாத்தனர்.
View this post on Instagram
அந்த நபரிடமிருந்து காகத்தை விடுவிக்க முயன்றபோது, அவர் காவல்துறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், ஆபாசமாகத் திட்டியதுடன், காகத்தை மீண்டும் தன்வசப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனாலும், அந்த நபரின் எதிர்ப்பையும் மீறி விலங்கு நல ஆர்வலர்கள் காகத்தை வெற்றிகரமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்தப் பறவை பத்திரமாக இருப்பதாகவும், முழுமையாகக் குணமடைந்த பிறகு பாதுகாப்பான திறந்த வெளியில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
