நல்ல தூக்கம் என்பது மனித உடலுக்கும் மூளைக்கும் தேவையான புத்துணர்ச்சியை அளித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் உடலியல் மாற்றங்கள் குறித்து விரிவாக இங்கு காண்போம்.

பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுவதற்கு முதன்மையான காரணம் அவர்களின் மூளை செயல்படும் விதம்தான். ஆண்கள் ஒரே நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்தும் நிலையில், பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சிந்தித்துச் செய்யும் ‘மல்டிடாஸ்கிங்’ திறனைக் கொண்டுள்ளனர். இதனால், பெண்களின் மூளை பகல் நேரத்தில் அதிக அளவில் உழைக்கிறது. அதிக வேலை செய்யும் மூளை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள கூடுதல் ஓய்வும் தூக்கமும் அவசியமாகிறது.

மேலும், பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் தூக்கத்தின் தேவையை அதிகரிக்கின்றன. மாதவிடாய் சுழற்சி, கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நின்றுவிடும் ‘மெனோபாஸ்’ காலம் போன்றவற்றில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் பெண்களின் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் சோர்வை ஈடுகட்டவும் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது.

இதுமட்டுமன்றி, வீட்டில் உள்ள பொறுப்புகள், வேலை அழுத்தம் மற்றும் குடும்பப் பராமரிப்பு போன்ற பல்வேறு அன்றாடக் காரணங்களால் பெண்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிக களைப்படைகிறார்கள். எனவே, பெண்கள் தினமும் போதுமான அளவு தூங்குவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன அமைதிக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.