உலக ரத்ததான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி இத்தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனித ரத்தப் பிரிவுகளான ஏ, பி, ஏபி மற்றும் ஓ ஆகியவற்றை முதன்முதலில் கண்டறிந்து, 1930இல் நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலேயே இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரத்ததானம் செய்வதற்குச் சில முக்கியத் தகுதிகள் அவசியமாகும். ரத்ததானம் வழங்குபவர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், குறைந்தபட்சம் 50 கிலோ எடைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், உடலில் ஹிமோகுளோபின் அளவு 12 முதல் 16 கிராமிற்குள் இருக்க வேண்டும். எந்தவொரு தொற்றுநோய் பாதிப்பும் இல்லாத ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ரத்ததானம் செய்யத் தகுதியானவர்கள் ஆவர்.
ரத்ததானம் வழங்குவது பெறுபவருக்கு மட்டுமல்லாமல், கொடுப்பவருக்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ரத்தம் கொடுக்கும் போது, தானமளிப்பவரின் ரத்தப் பிரிவு சரிபார்க்கப்படுவதோடு, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய்க்கிருமிகள் உள்ளனவா என்றும் இலவசமாகப் பரிசோதித்துத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரத்ததானம் செய்பவர் தன் உடல் ஆரோக்கியத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது.
தொடர்ச்சியாக ரத்ததானம் செய்வதன் மூலம் உடலில் புதிய ரத்தம் இயற்கையாக உருவாகிறது. இது உடலில் ஹிமோகுளோபின் அளவைச் சீராகப் பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும், தொடர்ந்து ரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ரத்ததானம் செய்வதால் உடலுக்கு எந்தவிதப் பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. தானம் கொடுக்கும் போது சிலருக்கு ஏற்படும் லேசான மயக்கம் என்பது பயத்தின் காரணமாக மட்டுமே நிகழ்கிறது. அவ்வாறு மயக்கம் ஏற்பட்டால், கால்களைச் சற்று மேலே தூக்கியவாறு படுக்க வைப்பதன் மூலம் அல்லது கால்களுக்கு இடையில் தலையை வைத்து அமர வைப்பதன் மூலம் அவர்கள் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். எனவே, அச்சமின்றி ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்போம்.
