தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றும் அனல் பறக்கும் விவாதங்களுடன் நடைபெற்றது.  இந்த விவாதத்தின் போது, அவை அரங்கை அதிர வைக்கும் ஒரு சம்பவமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மோதிக்கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இன்றைய அமர்வின் போது மைக்கைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசத் தொடங்கினார். அப்போது அவர், “இந்த அரசின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால்… நான் சொல்வதைக் கேட்டு யாரும் கோபப்படக் கூடாது; ஒரு கட்சியில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறுகிறார்கள், உடனே தாங்கள் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் போய் ஐக்கியமாகிறார்கள். இதை நாம் என்னவென்று சொல்வது? ‘குதிரை பேரம்’ என்றுதானே சொல்ல முடியும்?” என்று கடுமையான கேள்வியை வீசினார்.

அவர் பேசி முடித்த அடுத்த கணமே, இருக்கையில் இருந்து கொதித்து எழுந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. எதிர்க்கட்சியின் இந்த வார்த்தைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த அவர், அவையை நோக்கி அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார்.

“சட்டப்பேரவை போன்ற மாண்புமிகு அவையில் ‘குதிரை பேரம்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே முற்றிலும் தவறு. எனவே, அந்தச் சொல்லை உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்!” என்று திட்டவட்டமாகத் கோரினார்.

தொடர்ந்து அதிமுகவின் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “2017-ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கட்சியை நடத்திய வரை எங்களது முழு உடன்பாடும் அதோடு உண்டு. ஆனால், அதற்குப் பிறகு அமைந்த உங்கள் ஆட்சிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது; அது உண்மையான அதிமுகவும் அல்ல, அம்மாவின் அதிமுகவும் அல்ல!” என்று காரசாரமாகப் பேசினார்.

மேலும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்ட அவர், “அம்மா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., குடியுரிமைச் சட்டம் போன்ற மக்கள் விரோதத் திட்டங்கள் எதையும் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க அவர் அனுமதிக்கவில்லை. ஆனால், அதற்குப் பின் வந்த உங்கள் ஆட்சியில் டெல்லியிடம் எல்லாவற்றிற்கும் சரணடைந்து விட்டீர்கள். அதனால்தான் எங்கள் முதலமைச்சர் அதனை ‘நீர்த்துப்போன அதிமுக’ என்று பகிரங்கமாக விமர்சித்தார்” என்றார்.

எம்.எல்.ஏ.க்களின் கட்சி மாறுதல் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்ச்சனத்திற்கும் அவர் பதிலடி கொடுத்தார். “உங்கள் கட்சியின் தலைமை மீது உங்களுக்கே துளியும் நம்பிக்கை இல்லை. அதனால்தான் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் இன்று உங்கள் தலைமையிலிருந்து முற்றிலுமாக விலகி எங்களோடு கைகோர்த்து வருகிறார்கள். ஒரு கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டால், மாற்றுக்கட்சியில் இணைவது அரசியல் சாசனப்படி ஒவ்வொருவரின் இயல்பான உரிமைதானே?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் நாற்பது நிமிடங்கள் பேசியபோது நாங்கள் குறுக்கிடவே இல்லை. ஆனால், அவைக் களத்தில் இதுபோன்று ‘குதிரை பேரம்’ போன்ற தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சரின் இந்த அதிரடியான பேச்சும், அடுத்தடுத்து வீசிய வார்த்தைப் பாணிகளாலும் அவையில் கடும் அமளி உருவானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க, சட்டப்பேரவை வளாகம் பரபரப்பின் உச்சிக்குச் சென்றது.