தமிழகத்தில் ‘வெண்ணெய்ப் பழம்’, ‘ஆனைக்கொய்யா’, ‘பால்டா’ எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அவகோடா பழம், குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை அனைத்துத் தரப்பினரின் ஆரோக்கியத்திற்கும் உகந்த மிகச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே இது குறைந்த அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் கொடைக்கானல் பகுதிக்குட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் அவகோடா அதிகளவில் பயிரிடப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளதால் இதன் சந்தை விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.
முட்டை அல்லது கோள வடிவில் காணப்படும் இந்த அவகோடா பழங்கள், பழுத்த பின் தங்கப் பச்சை நிறத்துடனும், வெண்ணெய் போன்ற மிருதுவான சதைப்பகுதியுடனும் இருக்கும். விற்பனை வசதிக்காகக் காயாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு, பின்னர் பழமாக்கப்படுகிறது. இதில் புரோஆந்தோசயனிடின்கள் எனப்படும் வலிமையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
மேலும், இந்த பழம் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதுடன், உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும் மருத்துவக் குணத்தையும் கொண்டுள்ளது. கண் ஆரோக்கியம் என்று வரும்போது கேரட்டை மட்டுமே நாம் யோசிக்கும் வேளையில், பார்வையை மேம்படுத்த அவகோடாவும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. இதிலுள்ள வைட்டமின் ‘ஏ’, கண்புரை நோய் ஏற்படுவதையும், வயது முதிர்வால் கண் பார்வை மங்குவதையும் தடுக்கிறது.
மேலும், சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்க இது மிகவும் உதவுகிறது. வைட்டமின் E, K மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளதால், வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் சுருக்கங்களைக் குணப்படுத்துவதுடன், கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்து வறட்சியைச் சரிசெய்கிறது. இதன் காரணமாகப் பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ‘பேசியல் கிரீம்’ தயாரிப்பிலும் அவகோடா முக்கியப் பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், செரிமானத்திற்குத் தேவையான அமில உற்பத்தியை ஊக்குவித்து, சிறுநீரகச் செயல்பாட்டையும், இரத்தத்தின் pH அளவையும் சமநிலையில் வைக்கிறது. இதனால் சிறு குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சிறந்த உணவாகவும், வைட்டமின் குறைபாடுகளால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவாகவும் இது விளங்குகிறது.
மேலும், ஒரு அவகோடா பழம் மரத்தில் முழுமையாக உருவாக 6 முதல் 9 மாதங்கள் வரை எடுத்துக்கொள்கிறது. பெண்களின் கர்ப்ப காலத்தைப் போலவே இதன் வளர்ச்சி அமைந்திருப்பதால், இது பெண்களின் உடலமைப்பிற்கும் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்ற பழமாகக் கருதப்படுகிறது.
