தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ஆற்றிய உரை, தற்போது அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய்யின் ஆட்சி நிர்வாக முறையையும், இளைஞர்களுக்கு அவர் அளித்து வரும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி அவர் பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

​சட்டமன்றத்தில் உரையாற்றிய தவெக எம்.எல்.ஏ அபிஷேக், “இன்றைக்கு உண்மையான OG (Original Gangster/Original) சமூக நீதி மாடலையும், சமத்துவ மாடலையும் மிகச் சிறப்பாக நடத்திச் செல்பவர் நமது முதல்வர் விஜய் அவர்கள் மட்டும்தான்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

​தொடர்ந்து எதிர்க்கட்சிகளை நோக்கிச் சவால் விடுத்த அவர், “இன்றைக்கு எதிர்க்கட்சியினர் வேண்டுமானால் இளைஞர்களைக் கவர GEN Z கூட்டங்களை நடத்தலாம். ஆனால், என்னைப்போன்ற ஒரு GEN Z இளைஞரைச் சட்டமன்ற உறுப்பினராக மாற்றி அழகு பார்க்க முடியுமா என்றால், அது நமது முதல்வர் விஜய்யால் மட்டுமே முடிந்தது” என்று ஆவேசமாகப் பேசினார்.

​இளைஞர்களுக்கு வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளிக்காமல், அவர்களுக்கு நேரடியாக அதிகாரத்தில் பங்கு வழங்கி உண்மையான சமூக நீதியைத் தவெக அரசு நிலைநாட்டி வருகிறது என்பதைப் பறைசாற்றும் விதமாக அமைந்த அபிஷேக்கின் இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.