ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் அம்பாளுக்கு நடத்தப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம் ஆகும். இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாத பூர நட்சத்திரத்தில் தான் அம்பாள் தோன்றியதாகவும், ஆண்டாள் அவதரித்த நாளும் இதுதான் என்றும் புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காக்க அம்பாள் சக்தியாக உருவெடுத்த இந்த நாளில், சித்தர்களும் யோகிகளும் தங்கள் தவத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபடுவது அனைத்து நன்மைகளையும் தரும். இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. உமாதேவியும் இந்த நாளில்தான் தோன்றினார் என்று சொல்லப்படுவதால், இது அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

பொதுவாகக் கோயில் திருவிழாக்களில் அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் காப்பு நடத்துவது வழக்கம். ஆனால், ஆடிப்பூரம் என்பது அகிலாண்டகோடி அன்னைக்கே சிறப்பாக நடத்தப்படும் வளைகாப்புத் திருவிழாவாகும். இந்த நாளில் அன்னை தன் மனமகிழ்ந்து உலக உயிர்கள் அனைவருக்கும் தன் அருளையும் ஆசியையும் வாரி வழங்குகிறாள்.

ஆடிப்பூரம் நாளில் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, அங்கு அம்மனுக்குச் சார்த்தப்பட்ட வளையல்களில் இரண்டைப் பெற்றுப் பெண்கள் அணிந்து கொண்டால், அவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம். மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்றும், அகிலத்தின் நாயகியின் அருள் கிடைத்து அகிலமே மகிழ்ச்சியடையும் என்றும் நம்பப்படுகிறது.

நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிள்ளை வரம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரம் நாளில் அம்மனை மனமுருகி வழிபட்டு அருள்மிகு வளையல்களைப் பெற்று அணிவதன் மூலம் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்பாளின் அருள் பெற்று வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் அடைவதற்கு ஆடிப்பூரம் ஒரு மிகச்சிறந்த வழிபாட்டுத் திருநாளாகும்.