இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான், தனது உடல் எடையை 17 கிலோ வரை குறைத்து புதிய தோற்றத்துடன் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சர்ஃபராஸ் கான், கடந்த 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக இந்திய அணியில் இடம்பிடித்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வெளியில் இருந்த அவர், இந்த இடைப்பட்ட 18 மாதங்களில் தனது உடற்தகுதியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதன்படி மும்பையைச் சேர்ந்த சர்ஃபராஸ் கான் தனது உடற்தகுதி மற்றும் பேட்டிங்கை மேம்படுத்தும் முயற்சியில் கடந்த 18 மாதங்களில் மட்டும் 17 கிலோ எடையைக் குறைத்துள்ளார். முன்பு சற்று பருமனான தோற்றத்தில் இருந்த அவர், தற்போது மிகவும் ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ளதை அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த உடல் எடை குறைப்பு அவரது டி20 ஆட்டத்திற்கும் பெரிதும் கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் முக்கிய அங்கமாகச் செயல்பட்ட அவர், எம்.எஸ். தோனியின் வழிகாட்டுதலுடன் சில அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மும்பை டி20 லீக்கிலும் அதிக ரன்களைக் குவித்தார்.

மழைக்காலம் தொடங்கியதால் மும்பையில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டபோது, அவர் காஷ்மீருக்குச் சென்று தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.மேலும், மும்பை கிரிக்கெட் சங்க  உள்விளையாட்டு அரங்கில் அஸ்ட்ரோ-டர்ஃப் பந்தயங்களிலும், குர்லா பகுதியில் உள்ள தனியார் மைதானங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான கடினமான சிவப்பு மண் ஆடுகளங்களிலும் பல மணி நேரம் தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்.

ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வதில் வல்லவரான சர்ஃபராஸின் இந்த கடின உழைப்பு அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. துருவ் ஜூரல் சிறப்பு பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் நிலையில், சர்ஃபராஸ் கான் பிளேயிங் லெவனிலும் நேரடியாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொழும்புவில் உள்ள இந்திய அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், தனக்குக் கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகிறார்.