ஈரானின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு திரும்பும்போது ரகசிய ராணுவ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் முறையான ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில்தான் பயணம் செய்வதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த ரகசியத் தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிற்கு கத்தார் அரசு நன்கொடையாக வழங்கிய புதிய மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரத்யேக ஜெட் விமானத்தில்தான் டிரம்ப் பயணம் செய்து சென்றிருந்தார். ஆனால், துருக்கியில் இருந்து புறப்படும் போது அவர் எதிர்பாராதவிதமாக பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தினார். இது புதிய விமானத்தின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது. துருக்கியும் ஈரானும் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், அங்கு ஈரான் தொடர்பிலான பதற்றங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அங்காரா விமான நிலையத்தில் கேமராக்கள் முன்பாக பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறிச் செல்வது போலக் காட்டப்பட்டது. ஆனால், அதன்பிறகு விமான நிலைய கேட்டரிங் லாரி மூலமாக அவர் ரகசியமாக மற்றொரு சிறிய விமானமான ‘ஏர் போர்ஸ் சி-32ஏ’ என்ற ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாக இந்த ஆபரேஷன் குறித்து நன்கு அறிந்த அமெரிக்க அதிகாரி ஒருவரும், மற்றுமொரு தரப்பும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ரகசிய சி-32ஏ விமானம் பிரிட்டனை நோக்கிப் பறந்து இரவு 10:20 மணியளவில் அங்குள்ள ரேஃப் மில்டென்ஹால் தளத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து, காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானமும், அதில் இருந்த ஊடகவியலாளர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு அதே தளத்திற்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பழைய நினைவுகளுக்காகத் தான் அங்காராவில் இருந்து பிரிட்டன் வரை பழைய நீல நிற ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்யப் போவதாகவும், அங்குள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் பார்வையிடுவதற்காக புதிய விமானமும் அதே தளத்தில் நிற்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாவது விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ரகசியப் பயணம் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவ் சியுங் அளித்துள்ள அறிக்கையில், “அதிபர் மற்றும் அவரது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கத்தார் நன்கொடையாக வழங்கிய விமானத்தில் உயர் மட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் பொருத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அதிபர் சமீபத்தில் கூறியது போல், அமெரிக்காவின் மீது குறிவைத்துள்ள பல எதிரிகள் உள்ளனர், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் வசம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதுகுறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் உடனடியாக முன்வரவில்லை.
