மிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் அதிரடியான ஒரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 முக்கிய மாவட்டங்களில் மொத்தம் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படைப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆபரேஷனுக்காகச் சலசலப்பு இல்லாமல் ரூ. 264.14 கோடி பிரத்யேக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடிப்படைப் பிரிவானது நேரடியாக முதல்வர் ஜோசப் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு தனிப்பிரிவிலும் ஒரு காவல் ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் இருபது காவலர்கள் எனப் பலத்த பாதுகாப்புடன் களத்தில் இறங்கவுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 65 காவல் ஆய்வாளர்கள், 260 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1300 துடிப்பான காவலர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுத்து நிறுத்த முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இளைஞர்களைப் போதைப்பொருள் பிடியில் இருந்து மீட்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் காவல் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பிற்காகச் செயல்படுத்தப்படும் ‘சிங்கப் பெண்கள்’ அதிரடிப்படையைப் போல, இந்த புதிய போதைப்பொருள் தடுப்புப் படையும் குற்றவாளிகளைக் கூண்டோடு ஒடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
