இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி புகழ்பெற்ற காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த மைதானத்தில் இரு அணிகளும் மோதத் தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைதானம் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களே திணறிய இந்த மைதானத்தில், இந்திய வீரர் ஒருவர் மட்டும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித் தள்ளிய சாதனைதான் தற்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது.

கிரிக்கெட் உலகின் கடவுளாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட ரன் குவிக்கத் திணறிய மைதானம் காலி மைதானம். இங்கு சச்சினின் பேட் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. ஆனால், இந்திய அணியின் அதிரடித் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் காலி மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களைப் பந்தாடித் தள்ளியுள்ளார். காலி மைதானத்தில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சேவாக், மொத்தமாக 391 ரன்களைக் குவித்து மிரட்டியுள்ளார்.

அதன்படி காலி மைதானத்தில் சேவாக்கின் பேட்டிங் சராசரி மிரள வைக்கும் வகையில் 130.33 என்ற உச்சத்தில் உள்ளது. இவரது அதிரடி ஸ்டிரைக் ரேட் 90-க்கும் அதிகமாகவே இருந்தது. இந்த மைதானத்தில் 1 சதம், 1 இரட்டை சதம் மற்றும் 1 அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சேவாக்கைத் தாண்டி, மற்றொரு இந்திய வீரரான ஷிகர் தவானும் காலி மைதானத்தில் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். இந்த மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தவான், 366 ரன்களை விளாசியுள்ளார். இங்கு இவரது சராசரி 91.50 ஆகும். மேலும், இந்த மைதானத்தில் இவர் இரண்டு சதங்களையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இதற்கு நேர்மாறாக, இந்திய கிரிக்கெட் அணியின்  ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமண் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் காலி மைதானத்தில் ரன் குவிக்கப் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ராகுல் டிராவிட்: 36-க்கும் அதிகமான சராசரியுடன் 181 ரன்கள் மட்டுமே எடுத்தார். விவிஎஸ் லட்சுமண்: 35.75 சராசரியுடன் 143 ரன்கள் எடுத்தார். சச்சின் டெண்டுல்கர்: வெறும் 32 என்ற சராசரியுடன் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.