தேசிய அரசியலில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பி வரும் கேள்விகளும் விமர்சனங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கும் வரும் தருணத்தை முன்னிட்டு பாஜக அதிரடி வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சர் அமித்ஷா அவைக்களத்திற்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் கட்சி மேலிடம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ராகுல் காந்தியை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சித்து அவரது குற்றச்சாட்டுகளை முறியடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி திட்டத்தின் ஒரு பகுதியாக, இனிப் பொதுவெளியிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் ‘ராகுல்ஜி’ என்று மரியாதையுடன் அழைப்பதைத் தவிர்த்து, நேரடியாக ‘ராகுல்’ என்றே குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சமூக வலைதளங்களில் #ராகுல்_ஓடாதீர்கள் (Rahul-#BhagoMat) என்ற முழக்கத்தைத் தீவிரப்படுத்தி, இணையத்தில் வைரலாக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் செய்தியாளர் சந்திப்புகளில் தயக்கமின்றி இறங்கி அடித்து விளையாட வேண்டும் என்றும், ராகுல் காந்தியின் கருத்துக்களை வலுவாக மறுத்துப் பேச வேண்டும் என்றும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. அமித்ஷாவின் வருகையை ஒட்டி பாஜக வகுத்துள்ள இந்த புதிய அரசியல் உத்தி, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோஷியல் மீடியாவில் சூடான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
