முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ஆம் தேதி மதுரை மேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி முடிந்து, அதில் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த சிறுமிகள் சிலர் கடும் வெயிலின் காரணமாக மேடையில் அமர்ந்து கால்களை நீட்டி இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் விஸ்வநாதன், மயக்கமடைந்த ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டும், மற்றொரு சிறுமியின் கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி, பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை அமைச்சர் தொடலாமா எனப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தனது வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ – மாணவிகள் கடும் வெயிலின் காரணமாக மயக்கமடைந்த போது, அவர்களுக்குத் தான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு தான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும், தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஏதோ ஒருவகையில் தனது அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.