திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கட்டட அனுமதி பெறுவதற்குத் தன்னிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாக, உலகப் புகழ்பெற்ற ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடிப் புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக உக்கிரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அவர், “கடந்த திமுக ஆட்சியின் போது தென்காசி பகுதியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்காக நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.
அப்போது, நகர ஊரமைப்புத் துறையில் (DTCP) எங்களிடம் பெரிய தொகையைப் பணமாகக் கேட்டனர். அவர்கள் கேட்ட லஞ்சப் பணத்தை நாங்கள் கொடுக்காததால், திமுக ஆட்சியில் அந்தப் பள்ளிக் கட்டடத்திற்கு அனுமதியே வழங்கப்படவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய ஆட்சி மாற்றம் குறித்துப் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “ஆனால், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில், எவ்வித லஞ்சமும், எந்தப் பணமும் இன்றி அந்தப் பள்ளிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த இந்த ஊழலை நான் வெளிப்படையாகச் சொன்னதற்காக, தற்போது திமுகவினர் என் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையாக வசைபாடி வருகின்றனர்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஒரு முன்னணித் தொழிலதிபர், கடந்த திமுக ஆட்சியின் ஊழலையும் தற்போதைய தவெக அரசின் நேர்மையான செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பேசியுள்ள இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
