திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 4 பேர் உடல் கருகி எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் – ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில், நேற்று காலை கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீஸார் காரைப் பரிசோதித்தபோது, முன் இருக்கையில் ஒருவரும், பின் இருக்கையில் மூன்று பேரும் எலும்புக்கூடுகளாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்களை மீட்ட போலீஸார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் எஞ்சின் எண்ணை வைத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தன. அதாவது  சென்னை நந்தம்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்த முகம்மது ரபி (கார் ஷோரூம் ஊழியர்), அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா, மகள் அப்ரின் பாத்திமா (15), மகன் முகம்மது காஜா (13) ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்பது உறுதியானது.

முகம்மது ரபிக்கு கடும் கடன் தொல்லை இருந்ததாகவும், இதற்காகத் தனது வீட்டை விற்றும் கடனை அடைக்க முடியாமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 13-ம் தேதி சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட குடும்பத்தினர், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, காட்டுப்பகுதிக்குக் காரைச் செலுத்திச் சென்று, கதவுகளைப் பூட்டிக்கொண்டு, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளனர். இரவு முழுவதும் கார் எரிந்ததால், அவர்கள் எலும்புக்கூடுகளாகவே மீட்கப்பட்டனர்.

போலீஸார் காரைத் திறந்து உடல்களை மீட்டபோது, பின் இருக்கையில் இருந்த இரண்டு குழந்தைகளும் தங்களது தாயாரைக் கட்டியணைத்த நிலையிலேயே எலும்புக்கூடுகளாகக் கிடந்துள்ளனர். இந்த உருக்கமான காட்சியைக் கண்டு அங்கிருந்த போலீஸாரும் பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் கடன் தொல்லையால் பிஞ்சு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.