திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயியான இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை, ஆறுமுகம் பருத்திப்பாடு சாலை வழியாகத் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென ஆறுமுகத்தை வழிமறித்தனர். தப்ப முயன்ற அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்றடைப்பு போலீஸார், ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்: நிலத் தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளின் அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தால் நெல்லையப்பபுரம் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.