தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதன் முக்கியக் கட்டமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து திமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை கூட்டணிக் கட்சிகளுடன் மிகத் தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு 5 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இறுதி இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுவாகத் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்றும் இருதரப்புத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த விவரங்கள், வரும் நாட்களில் நடைபெறும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்கள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன.
மேலும் தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த 5 தொகுதிகள் ஒதுக்கீடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
