மும்பையில் சமீபத்தில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்த நிலையில், தற்போது அதேபோன்றதொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு கிர்ஹாமில் நடந்துள்ளது. அரிசி டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க வைக்கப்பட்ட ‘அலுமினியம் பாஸ்பைடு’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியின் நெடியால், இரண்டு வயது சிறுமிக்கு கடுமையான நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தச் சிறுமிக்கு தொடர்ச்சியாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தற்போது அந்தச் சிறுமிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஹாஜி அலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள்.
இந்த நச்சுத்தன்மை குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், அலுமினியம் பாஸ்பைடு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும், சிறிதளவு அதன் நெடியைச் சுவாசித்தாலும் அது உயிருக்கு ஆபத்தானதாக முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், உடல் உறுப்புகளும் தீவிரப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. முன்னதாக, இதே வீட்டில் இருந்த சிறுமியின் மூத்த சகோதரிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் குணமடைந்துள்ளாள்.
எனவே, வீட்டில் தானியங்களைப் பாதுகாக்கும்போது இதுபோன்ற வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது அதீத எச்சரிக்கையுடனும், குழந்தைகளைத் தள்ளியும் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
