கல்வி என்பது வெறும் புத்தகப் பாடங்களை நெட்டுருப்பண்ணி தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல; மாறாக, ஒரு அறிவியல் கோட்பாட்டை மாணவர்களின் கண்களுக்கு முன்பாகக் காட்சியாக நிறுத்தி, அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதில்தான் அதன் உண்மையான வெற்றி இருக்கிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்த உண்மைக்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது. ஆசிரியர் நிதி குப்தா என்பவர், பாடப்புத்தகத்தில் கடினமாகத் தோன்றும் ‘ஒளி எதிரொளிப்பு’ என்ற அறிவியல் விதியைத் தன் வகுப்பறை மாணவர்களுக்கு மிக எளிமையான முறையில் செய்முறைப் பயிற்சி மூலம் விளக்கிக் காட்டியுள்ளார்.
வகுப்பறை விளக்குகளை அணைத்து இருள் சூழ்ந்த சூழலை உருவாக்கிய ஆசிரியர், ஒரு சிறிய கண்ணாடி, லேசர் விளக்கு மற்றும் சிறிதளவு பவுடர் ஆகிய மிகச் சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த சோதனையைச் செய்துள்ளார். லேசர் ஒளியைக் கண்ணாடியின் மீது பாய்ச்சும்போது, அந்த ஒளிக்கற்றை கண்ணாடியில் பட்டு எவ்வாறு கோணலாகத் திரும்பிச் செல்கிறது என்பதை மாணவர்கள் கண்கூடாகக் காணச் செய்தார்.
மேலும், காற்றில் பவுடரைத் தூவிவிட்டதன் மூலம், இருளுக்குள் பயணிக்கும் லேசர் ஒளியின் துல்லியமான பாதையை மாணவர்கள் மிகத் தெளிவாக உணரும்படிச் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் கோட்பாடுகளாகப் படிக்கும்போது மனப்பாடம் செய்யக் கடினமாக இருக்கும் அறிவியல் கருத்துக்கள், இதுபோன்ற எளிமையான மற்றும் சுவாரசியமான செய்முறைகள் மூலம் கற்பிக்கப்படும்போது மாணவர்களின் மனதில் காலத்திற்கும் அழியாமல் பதிந்துவிடுகின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள், “ஆசிரியை கற்பிக்கும் இந்த பாணி அற்புதமானது, இப்படிப் படித்தால் எந்தக் குழந்தையும் அறிவியலை மறக்காது” என்றும், “என் பள்ளிப் பருவத்திலும் இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்திருக்கக் கூடாதா?” என்றும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த வீடியோ, நவீனக் கற்பித்தல் முறைகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது.
See this Instagram video by @nidhi4046 https://t.co/267Sokz8C9
“>
