சத்ரபதி சாம்பாஜிநகரில் கணவனே தனது மனைவியை போதை மருந்து கொடுத்து, தன் நண்பனிடம் ஒப்படைத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நடந்த இந்த கொடூர சம்பவத்தில், கணவர், மைத்துனர் மற்றும் மாமனார் வீட்டு உறவினர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கணவரின் நண்பரான ஷேக் ரிஸ்வான், அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது கணவரிடமும் மாமனார் வீட்டினரிடமும் புகார் செய்தும், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் பெண்ணையே மிரட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2025-ல், கணவர் தனது மனைவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, அவரைத் தன் நண்பன் ரிஸ்வானிடம் ஒப்படைத்துள்ளார். ரிஸ்வான் அந்தப் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்தச் செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டியுள்ளார்.
மேலும், இதைப் பற்றி அறிந்த மைத்துனரும் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 20 வயது பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரிஸ்வானைக் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே அந்தப் பெண்ணின் கணவர் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
