மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்பூர் கிராமத்தில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான மல்லேஷ் தேபேகர் என்பவரின் இரண்டு மகள்களே இந்த விபரீத சம்பவத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

​தன் வீட்டிற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த, அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காக விவசாயி மல்லேஷ் பகல் நேரத்தில் வீட்டின் உட்பகுதியில் பூச்சி மருந்து தெளித்துள்ளார். தானியங்களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த காரியத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

​இதனைத் தொடர்ந்து, அன்றைய இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த கொண்டைக்கடலையில் இருந்து வீரியமிக்க நச்சு வாயு மெதுவாக வெளியேறி வீடெங்கும் பரவியுள்ளது. அந்த நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக மல்லேஷின் மகள்களான ஆரோகி (6) மற்றும் ஆராத்யா (4) ஆகிய இரண்டு சிறுமிகளும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​காலையில் குழந்தைகள் இருவரும் எந்தவொரு அசைவும் இன்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.