கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து, மாணவர்கள் வீட்டிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல் காக்க வைத்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

​அந்த ஆசிரியரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, தமக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாகப் பள்ளி வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆசிரியர் அகஸ்டினிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் அவரைத் தாக்கியதாகவும் தெரிகிறது.

​சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஆசிரியரைப் பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

​இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதால் அச்சமடைந்த ஏராளமான பெற்றோர், உடனடியாகப் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 2-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட பதற்றமான சூழல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.