கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்பவரின் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது பெயரில் போலியான நிறுவனம் தொடங்கி ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனது சகோதரியின் திருமணத்திற்காக ரூ.30,000 கடன் தருவதாகக் கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த அமித் குப்தா என்பவர், ராஜ் பிரஜாபதியின் பான் அட்டை மற்றும் கையொப்பத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆவணங்களைக் கொண்டு ‘மெஸ்ஸர்ஸ் காட்ஜெட்ரிக் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற போலி நிறுவனத்தைத் தொடங்கி, ரூ.100 கோடி வருமானம் ஈட்டியதாகக் காட்டி, ரூ.28 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்திருப்பதாக மத்திய ஜிஎஸ்டி துறைக்குத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி துறையிலிருந்து ராஜ் பிரஜாபதிக்கு சம்மன் வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வாரணாசி அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு சாதாரண பஞ்சர் கடைக்காரர் என்பதை அறிந்து திகைத்தனர்.

இது குறித்து ராஜ் பிரஜாபதி எய்ம்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது காவல்துறை அதிகாரிகள் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எளிய மனிதரின் அடையாளத்தைத் திருடி இவ்வளவு பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.