ஆண்டுக்கு ரூ. 89.5 லட்சம் சுமார் 95,000 டாலர்கள் சம்பாதிக்கும் 26 வயது இளைஞர் ஒருவர், அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரத்தில் வாழ்வதால் தட்டுமுட்டுச் செலவுகளுக்கே தான் கஷ்டப்படுவதாக ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதத்திற்கு ரூ. 3.68 லட்சம் கைக்கு வரும் சம்பளத்தில், வாடகை, கல்விக்கடன், மளிகை மற்றும் இதர செலவுகள் போக, கச்சேரிக்குச் செல்வது அல்லது ஆடம்பரமான பொருட்களை வாங்குவது போன்ற “சிறிய பெரிய விஷயங்களுக்கு” பணம் ஒதுக்க முடியவில்லை என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்.
சேமிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை அளிப்பதால், தற்போதைய வாழ்க்கை முறையில் தனக்கு மனநிறைவு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்து பல உயர் வருமானம் ஈட்டும் நபர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலானவர்கள், இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் திட்டமிட்டுச் சேமிக்க வேண்டும் என்றும், சிக்கனமே சிறந்த நிதி மேலாண்மைக்கு வழி என்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அதிக வருமானம் இருந்தாலும், வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் எதிர்கால சேமிப்பு இலக்குகளுக்கு இடையில் சமநிலையைப் பேணுவது இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு சவாலாக மாறியிருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
