திண்டுக்கல் நகரில் உள்ள யாதவ மேட்டுராஜக்காபட்டி பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில். ஆரம்பத்தில் 1984-ஆம் ஆண்டு சிறிய பஜனை மடமாகத் தொடங்கப்பட்ட இந்த இடத்தில், பக்தர்களுக்குப் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததால் நாளடைவில் பெரிய கோவிலாகக் கட்டப்பட்டது. இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு நல்ல அறிவாற்றலும், வணிகர்களுக்குத் தொழில் விருத்தியும், குடும்பத்தில் அமைதியும் பெருகி வருகிறது.

குறிப்பாக, இக்கோவில் குழந்தை பாக்கியம் தரும் அருள்மிக்கத் தலமாகப் போற்றப்படுகிறது. நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இங்கு வந்து மனமுருகிப் பிரார்த்தனை செய்யும்போது அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறிப் பிறக்கும் குழந்தைகளை, இக்கோவிலில் உள்ள கிருஷ்ணன் முன் படுக்கவைத்து முதன்முதலாக உணவு (அன்னப்ராசனம்) ஊட்டுவது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் குழந்தைகள் எந்தவித நோய்நொடியும் இன்றி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விழா தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு வந்து ஆடிப்பாடி மகிழ்வர்.

மறுநாள் நடக்கும் உறியடித் திருவிழாவில் திரளான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். இதைக் காணப் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். மேலும், கிருஷ்ண பரமாத்மாவிற்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்வும் கோலாகலமாக நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புகள் நிறைந்த இக்கோவிலில் 1996 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.