OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலியை இலவசமாகப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு இனிமேல் உரைவழி உரையாடல்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் வரம்புகளும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பணம் செலுத்தாமலேயே ChatGPT-ஐ வரம்பின்றித் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GPT-5.6 லூனா’ என்ற புதிய மாடல், இலவசப் பயனர்களுக்கான முதன்மை மாடலாக மாற்றப்பட உள்ளது. இந்த மாடலுக்கான உரைவழி உரையாடல் வரம்பற்ற வசதிகள் அடுத்த வாரம் முதல் அனைவருக்கும் கிடைக்கும் என OpenAI தெரிவித்துள்ளது.
அதே சமயம், கட்டணம் செலுத்தும் Plus மற்றும் Pro பயனர்களுக்கான ‘GPT-5.6 Sol’ மாடலும் பல்வேறு புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய அப்டேட்டுகள் பயனர்களுக்குத் தேவையில்லாத கூடுதல் விளக்கங்களைத் தவிர்த்து, மிகவும் நேரடியான மற்றும் துல்லியமான பதில்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக எண்கள், தேதிகள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பான கேள்விகளில் தவறுகள் நேராதவாறு இந்த புதிய மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிதி, மருத்துவம் மற்றும் சட்டரீதியான கேள்விகளுக்கு முந்தைய பதிப்புகளை விட இது மிகவும் துல்லியமான பதில்களைத் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ChatGPT-யில் உரைவழி உரையாடல்களுக்கு இனி எந்த வரம்பும் இல்லை என்ற போதிலும், இலவசப் பயனர்களுக்குக் கோப்புகளைப் பதிவேற்றுவது மற்றும் படங்களை உருவாக்குவது போன்ற அம்சங்களில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
