இந்தியாவில் அதிகளவிலான சாலை விபத்துகள் அரங்கேறும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டு அவர்களின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மாநிலம் மிகவும் பின் தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நேர்ந்த முதல் 60 நிமிடங்களான ‘கோல்டன் ஹவர்’ நேரத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் முதலுதவியும், மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்வதும் மட்டுமே பல உயிர்களைக் காப்பாற்றக்கூடும் என்ற போதிலும், களத்தில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குத் கொண்டு சென்றால் காவல்துறையின் விசாரணைக்கும் நீதிமன்ற அலைச்சலுக்கும் ஆளாக நேரிடும் என்ற பொதுமக்கள் மத்தியில் நிலவும் தேவையற்ற பயத்தைப் போக்குவதற்காக, மத்திய அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு ‘நல்ல சமாரியன்’  என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கியவரை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்து அவர் உயிர் பிழைக்க வழிவகை செய்வோருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று ஊக்கத்தொகை பெற்றவர்களின் பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்க, தமிழகத்திலோ கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 19 பேர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இத்தகைய அத்தியாவசியத் திட்டங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் சென்றடையாததே இந்தத் தொடர் பின்தங்கலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.