மும்பை செவ்ரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் திருமணப் பிரேரணையை அவரது காதலனின் தாய் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் சமூக வலைதளங்களில் அந்தத் தாய் குறித்து அவதூறான கருத்துகளையும், சிதைக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலப் பாதுகாப்பு வாரியத்தில் பணிபுரியும் அந்தத் தாய், தன் மகன் அந்தப் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக உறவில் இருந்ததாகவும், ஆனால் அந்தப் பெண்ணின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் மகன் அந்த உறவை முறித்துக்கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்குப் பெண் வற்புறுத்திய நிலையில், தாய் மறுப்பு தெரிவித்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து, ராவ்லி மார்க் காவல் நிலைய போலீசார், அந்தப் பெண் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணத்தை நிராகரித்த காரணத்திற்காக ஒரு குடும்பத்தை அச்சுறுத்தி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.