உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின்  பலுவா கிராமத்தில், குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக 16 வயது சிறுவன் ஒருவன் தனது அண்ணன், அண்ணி மற்றும் 3 வயது மருமகனை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த கொடூர சம்பவம் திங்கள்கிழமை அரங்கேறியுள்ளது. வீட்டில் உள்ள மளிகைக் கடையை அண்ணன் அமித் குப்தா (35) ஆக்கிரமித்து விடுவாரோ என்ற பயத்திலும், தனக்கு படிக்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் அச்சிறுவன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளான். சம்பவத்தன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அண்ணன் அமித், அவரது மனைவி ரஞ்சனா (32) மற்றும் 3 வயது குழந்தை ரேயான்ஷ் ஆகியோரை அச்சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொன்றான். இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த 9 வயது மருமகளை சிறுவன் தாக்காமல் விட்டுவிட்டான்.

இக்கொடூரக் கொலைகளைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனைக் கைது செய்தனர். விசாரணையின் போது, “அண்ணி எனக்கு இரண்டு நாட்களாக சாப்பாடு தரவில்லை, அதனால் தான் கொன்றேன்; எனக்கு சிறையிலாவது சரியான நேரத்திற்கு சாப்பாடு கிடைக்குமா?” என்று சிறுவன் அழுதபடியே கேட்டுள்ளான். குடும்பத்தினரின் அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் சாப்பாடு, துணி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டதால் அச்சிறுவன் ‘சைக்கோபாடிக்’ என்ற மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.