மனைவியின் காதலன் கணவரை 17 முறை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதானா பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தாலிப் என்ற நபர் உயிரிழந்தார். அவரை அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஹாசிம் என்பவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது.

தாலிப்பின் மனைவி மீனாவுடன் ஹாசிமுக்கு காதல் தொடர்பு இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் தாலிப்பை ஹாசிம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாலிப்புக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஹாசிமை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஹாசிம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. போலீஸார் அவரை சுற்றிவளைத்தபோது, துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஹாசிமை போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட ஹாசிமிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதம் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது, “நான் அவரை கொல்லவில்லை என்றால் அவர்தான் என்னை கொன்றிருப்பார்” என்று ஹாசிம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்தக் கூற்றின் உண்மைத் தன்மை மற்றும் கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தாலிப்பின் மனைவியின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.