தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முக்கியத் தொழில் முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குத் தப்பியோடிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 40 நாட்களில் எந்தவொரு நிறுவனமும் வெளியேறவில்லை என்றும், கடந்த முந்தைய திமுக ஆட்சியில் நிலவிய இமாலய ஊழல் மற்றும் லஞ்சக் கொடுமை காரணமாகவே சுமார் ரூ. 3.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு 25-க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகப் பகீர் புகாரைக் கிளப்பினார்.

தவெக அமைச்சரின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுக்கு நடுவே, தற்போது ஆந்திரப் பிரதேச மாநில மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லோகேஷ் நாரா தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தவெக தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அரசியல் களம் எவ்வளவு கடுமையானது, இரக்கமற்றது” என்று பதிவிட்டுள்ள அவர், முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் ஆந்திரா கடுமையாகப் போட்டியிட்டது உண்மைதான் என்றாலும், முந்தைய தமிழக அரசு லஞ்சம் கேட்பதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறி தான் இதுவரை கேட்டதே இல்லை என்றும், மிகவும் தூய்மையான மற்றும் தொழில்முறை சார்ந்த முதலீட்டு நடைமுறையையே திமுக அரசு பின்பற்றியது என மனதாரப் பாராட்டியுள்ளார்.

தவெக அமைச்சர் கீர்த்தனா திமுக மீது ஊழல் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள நிலையில், அண்டை மாநில ஆந்திர அமைச்சரே திமுகவுக்கு இத்தகைய நற்சான்றிதழ் வழங்கியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் தவெக – திமுக தொண்டர்களிடையே விவாதத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்து, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.